- போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், கொடிக்குளம், உரத்தூர்,கோரை குளம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார். துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியக்குடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக் குழு நீர் வரவில்லை என்றார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்: சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. கோடையை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி போகலூர் யனியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு மழை காலத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை காலத்திற்கு முன்பாக அனைத்து அத்தியாவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதில் கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.