ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- மீன்வளத்துறை அறிவிப்புக்கு பின்னரே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும்.
- நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு சுமார் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக கேரள கடலோர பகுதிகள், குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சார்ந்த தென் தமிழக கடலோர பகுதிகளிலும் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், எனவே வருகிற 25-ந்தேதி வரை மேற்கண்ட கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வரும் நிலையில் தனுஷ் கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கானப்படுகிறது. மேலும் 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன்வளத்துறை அறிவிப்புக்கு பின்னரே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் விரைந்து கரை திரும்ப வேண்டும் என மீனவ சங்க நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பாதுகாப்புடன் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.