ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பேரீச்சம் பழங்கள் விற்பனை சூடுபிடித்தது
- ரம்ஜான் சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களை கட்டும்.
- ஈரான், சவுதி, ஓமன், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் பேரீச்சம் பழங்கள் பெட்டி பெட்டியாக வந்து குவிந்துள்ளன.
சென்னை:
ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த விரத நாட்களில் அவர்கள் பேரீச்சம் பழங்களை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் பேரீச்சம் பழங்கள் விற்பனை முழுவதும் அதிகமாகவே இருக்கும்.
சூரியன் உதயமாவதற்கு முன்பு அதிகாலையில் சாப்பிட்டு விட்டு நாள் முழுவதும் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடிக்கும் நேரத்தில் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிப்பார்கள்.
இதனால் ரம்ஜான் சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களை கட்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் பேரீச்சம் பழங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமாக விற்பனையாவதை விட ரம்ஜான் காலத்தில் 50 சதவீதம் அளவுக்கு பேரீச்சம் பழங்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பேரீச்சம் பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே பேரீச்சம் பழங்களின் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு ரம்ஜான் கால கட்டத்தில் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
ஈரான், சவுதி, ஓமன், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் பேரீச்சம் பழங்கள் பெட்டி பெட்டியாக வந்து குவிந்துள்ளன. பல்வேறு வகைகளில் காணப்படும் வெளிநாட்டு பேரீச்சம் பழங்கள் இரும்பு சத்து நிறைந்ததாக இருப்பதால் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கு 2 மாதத்திற்கு முன்பில் இருந்தே அதிக அளவில் பேரீச்சம் பழங்களை தமிழக வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்துக்கொள்கிறார்கள். அப்போதில் இருந்தே வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கி விடுகிறது.
இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் விற்பனையாகி இருப்பதாக மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார். உலக சந்தையிலும் பேரீச்சம் பழங்களின் வியாபாரம் அதிகரித்து உள்ளது. வியாபாரிகள் பல கோடி மதிப்பிலான பேரீச்சம் பழங்களை விற்பனை செய்துள்ளனர்.
தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாக பேரீச்சம் பழங்களை கப்பலில் வியாபாரிகள் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.