ராணிப்பேட்டையில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
- அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்தது
- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை:
15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2022-2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பிரிவின் சார்பாக இன்று காலை 7 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து சைக்கிள் போட்டி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சைக்கிள் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இப்போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சைக்கிள் போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மாணவ- மாணவிகள் 13 வயது, 15 வயது, 17 வயது கொண்ட மாணவர்கள் 5கி.மீ தூரம் கலந்து கொண்டனர்.
வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு காசோலை மூலம் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களில் பிடிப்பவர்களுக்கு ரூ.250 வீதம் பரிசு தொகையும் தகுதி சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி சிப்காட் பெல் ரூட் அக்ராவரம் வழியாக சென்று மீண்டும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி.பிரபு மற்றும் மாவட்ட உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள், ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வகை பள்ளிகளின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.