அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- போலீசாரிடம் மனு அளித்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஒன்றியம் மேல்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரேசன் கடை உள்ளது.
இந்த ரேசன் கடை அருகே உள்ள அரசு இடத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் கற்களைக் கொட்டியும், கழிவு நீரை வெளியேற்றியும் ரேசன் கடைக்கு வரும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் ரேசன் கடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ரேசன் கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வார்டு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், கிராமத் தலைவர் ஹேமச்சந்திரன் மற்றும் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றிரவு அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
மேலும் ரேசன் கடையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களும், பெண்களும் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.