வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னைக்கு ரெட் அலர்ட்
- நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது. அது இன்று (திங்கட்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்) மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் தென் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதன் நகர்வை பொறுத்து தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
வங்கக் கடலில் தென் மத்திய பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். பின்னர் அது வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும்.
மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதியில் வீசும் நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும்.
இதற்கிடையே வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கனமழை தொடங்கி உள்ளது.
இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
நாளை (15-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 16-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி), நாளை மறுநாள் (16-ந்தேதி) ஆகிய 2 நாட்களும் 20 சென்டி மீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 17-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று அதிகாலை 8.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டு இருந்தது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.