உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பூங்குணம் கிராமத்தில் கொள்ளை நடந்த எதிரெதிர் வீடுகளை படத்தில் காணலாம்.

பண்ருட்டி அருகே எதிரெதிர் வீடுகளில் நகை, பணம் கொள்ளை:அரசு பள்ளியிலும் திருட்டு

Published On 2023-07-25 07:21 GMT   |   Update On 2023-07-25 07:21 GMT
  • முத்துகுமாரசாமி, வீட்டின் கதவை திறந்து குடும்பத்துடன் உள்ளே சென்றார்.
  • கடலூரில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூங்குணம் கிராமம் உள்ளது. இங்கு சோடா கம்பெனி நடத்தி வருபவர் முத்துகுமாரசாமி (வயது 40). கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவரது தாயார் இறந்துவிட்டார். இதனால் தினமும் இரவு குடும்பத்துடன் அங்கு சென்று தங்கிவிட்டு, காலையில் எழுந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள். 

அதன்படி, இன்று காலை வீட்டிற்கு வந்த முத்துகுமாரசாமி, வீட்டின் கதவை திறந்து குடும்பத்துடன் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு திறந்திருந்தது. வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதுவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசாருக்கு முத்துகுமாரசாமி தகவல் கொடுத்தார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது முத்துகுமா ரசாமியின் எதிர்வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ராமலிங்கம், ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் புதுவையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், சம்பவத்தை கூறி உடனடியாக பூங்குணம் வருமாறு கூறினார்கள். அவர்கள் வந்த பிறகே அந்த வீட்டில் எந்தெந்த பொருட்கள் திருடு போயுள்ளது என்பது தெரியவரும். இதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். ஒரே நாளில் எதிரெதிர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி காந்திரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் பூவாராகமூர்த்தி, பள்ளிக்கு விரைந்து வந்தார். அறையில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், மின் விசிறி மற்றும் கல்வி உபகரணங்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பண்ருட்டி நகரில் எப்போதும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள காந்தி ரோட்டில் இருந்த அரசுப் பள்ளியில் கொள்ளை நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News