உள்ளூர் செய்திகள்

முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் பயணிகள் பயணம் செய்தால் ஆர்.பி.எப். போலீசார் நடவடிக்கை

Published On 2024-06-17 05:56 GMT   |   Update On 2024-06-17 05:56 GMT
  • வட மாநிலத்தவர்கள் புகுந்ததால் ரிசர்வேஷன் பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை.
  • முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

சென்னை:

வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளை முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்து கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கடந்த வாரம் சென்னையில் இருந்து ஹவுரா சென்ற ரெயிலில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் புகுந்ததால் ரிசர்வேஷன் செய்த பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

வட மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் அத்துமீறி ரெயில் பெட்டிகளை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

அதன் அடிப்படையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தமிழகத்திற்கு உள்ளே ஓடக்கூடிய ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்.பி.எப். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.

அதன்படி வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் குறிப்பாக அதிக பயணிகள் பயணிக்கும் ரெயில்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் சுற்றித்திரியும் நபர்களிடம் டிக்கெட்டை கேட்டு விசாரித்து முன்பதிவு டிக்கெட் இல்லாதவர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் கீழே இறக்கி பொதுப் பெட்டிக்கு மாறி செல்ல அறிவுறுத்துகின்றனர்.

பரிசோதகர்களும் விரைவாக டிக்கெட்டை ஆய்வு செய்து சாதாரண டிக்கெட்டுடன் யாரும் பயணிக்கிறார்களா? என்பதை கண்காணித்து வெளியேற்றுகிறார்கள்.

சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களிலும் போலீசார் பயணம் செய்து முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் ரெயில்வே போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் பாதுகாப்பு அளித்திட தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

Similar News