அண்ணாமலை வழக்கை சந்திக்க தயார் என ஆர்.எஸ்.பாரதி பதிலடி
- அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது.
- உரிய வகையில் வழக்கை சந்திப்பேன்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்மீது வழக்கு தொடர்ந்தது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அவருக்கு நான் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை.
இப்போது கோர்ட்டுக்கு சென்றுள்ளார். அதை சந்திக்க தயார். அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை ஒவ்வொன்றாக கோர்ட்டில் நிரூபிப்போம்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடிக்கு தங்கம் பிடிபட்ட விவகாரத்தை திசை திருப்ப கோர்ட்டுக்கு சென்றுள்ளார். யாரும் அதைப் பற்றி பேச மாட்டார்கள். பயந்து விடுவார்கள் என நினைக்கிறார். குற்றவாளியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளி வந்துள்ளதே?
பா.ஜ.க. தலைவர்களின் புகைப்படம் வந்ததற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லையே?
இப்போது கோர்ட்டில் என்ன கூறி உள்ளார் என முழுமையாக தெரியவில்லை அதன் நகல் கிடைத்தது. பார்த்துவிட்டு உரிய வகையில் வழக்கை சந்திப்பேன்.
கள்ளக்குறிச்சி விவகாரம் சம்பந்தமாக அண்ணாமலை மீது ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு 4-ந்தேதி நோட்டீசுக்கு பதில் அனுப்பி உள்ளேன். அதை 6-ந்தேதி அவரது வக்கீல் பால் கனகராஜ் வாங்கி இருப்பார் என கருதுகிறேன்.
அண்ணாமலை பற்றி நிறைய தகவல்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.
நான் மட்டுமல்ல, மற்ற தலைவர்களும் இதுபற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். இனிமேல் அண்ணாமலை பற்றி ஒவ்வொன்றாக வெளிவரும். என்னைப்போல் மற்ற தலைவர்களும் வெளியிடுவார்கள்.