மாதம் ரூ.1000 உதவித்தொகை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாணவிகள் நன்றி
- புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
- "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
ஊட்டி
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கக் கூடிய ஒரு மகத்தான திட்டம் இத்திட்டமாகும்.
நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 300 மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் முதற்கட்டமாக அரசு கலைக்கல்லூரி ஊட்டி மற்றும் கூடலூர், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவிகள் என மொத்தம் 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கி பற்று அட்டைகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
புதுமைப்பெண்கள் திட்டத்தில் பயன் அடைந்த மாணவிகள் கூறியதாவது:-
மாணவி சுகாஷிணி:
எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம். நான் 6 -ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சேலம் ஆட்டயம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தேன்.அதன் பின்னர் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பதற்கான இடம் கிடைத்து முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டம் "புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் உதவியாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
. இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி ஆர்.வர்சினி:
நான் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்பொழுது பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறேன். நான் அரசு பள்ளியில் படித்த காரணத்தினால் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் எண்ணிக்கை அதிகமாகும்.
எனது தோழிகளுக்கும் இத்திட்டத்தினை பற்றி எடுத்துக் கூறி உயர்கல்வி கற்க ஊக்கப்படுத்துவேன். பெண்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என்பதனை உணர்த்தும் வகையில், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கிய, முதல்-அமைச்சருக்கு நீலகிரி மாவட்ட கல்லூரி மாணவிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.