சாகர் மித்ரா பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு- கலெக்டர் தகவல்
- மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
- வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அறிவிக்கையின் படி மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா என்கிற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆன பணிக்கு பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பகுதியில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 19 -ந் தேதி ஆகும்.
இப்பணியில் சேர்வதற்கு இளங்கலை மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் தகுதியாகும். விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதியுடன் கிடைக்கவில்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல், தாவரவியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், இயற்பியல் ஆகியவை பரிசீலிக்கப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பத்தில் (ஐ.டி) படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் நபர் தொடர்புடைய வட்டத்தில் உள்ள மீனவர் கிராமம், வருவாய் கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மீனவ கிராமத்தில் தகுதியானவர்கள் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட வட்டத்தில் உள்ள அண்டை கிராமத்தினரை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு, 01.01.2023 இல் உள்ளவாறு 35 வயதுக்கு மேற்படக்கூடாது. தேர்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாகர் மித்ர பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மீனவ கிராமங்கள் ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு ஆகிய மீனவ கிராமங்களாகும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், தகுதி மற்றும் மூப்பு நிலை அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
எனவே, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:873/4, அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர்-613001 .
தொலைபேசி எண் :04362-235389 என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வயது குறித்த ஆவண நகல்களுடன் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.