கருங்கற்களால் ஆன சைவ- வைணவ கோவில் கும்பாபிஷேகம்; வருகிற 9-ந் தேதி நடக்கிறது
- தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
- யாகசாலை பூஜைகள் நேற்று சைவ மற்றும் வைணவ தலங்களுக்கு என தனித்தனியாக பூஜைகள் தொடங்கியது.
திருப்பனந்தாள்:
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு முற்றிலும் கருங்கல்லால் ஆன கோவில் ராஜகோபுரங்களின் திருப்பணிகள் நிறைவு பெற்று வரும் 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் கடந்த 2005ம் ஆண்டு வலம்புரி விநாயகர், அனுக்ரஹ ஆஞ்சனேயர், மற்றும் ஐய்யப்பன் ஆகிய தெய்வங்களின் ஆலயங்கள் ஒரே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே இடத்தில் பல கோடி ரூபாய் செலவில், புதுப்பொலிவுடன் முழுவதும் கருங்கல் திருப்பணியாக, இரட்டை ராஜகோபுரங்களுடன், சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்தார்போல, வலம்புரி விநாயகர், பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி கோயில், அனுக்கிரக ஆஞ்சநேய சுவாமிகளுடன் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் ்கோயில் ஆகியவை இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவில்களின் கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தருமபுர ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்று, இறைவன் அருள் பெற வேண்டும் என்று யாகசாலை பூஜைகள் நேற்று சைவ மற்றும் வைணவ தலங்களுக்கு என தனித்தனியாக பூஜைகள் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று மாலை கதம்ப மாலை என்ற தலைப்பில் மணிகண்டன் மற்றும் ஆழ்வார்களின் தேன்தமிழ் என்ற தலைப்பில் நாராயணன் ஆகியோரின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும், நாளை வியாழக்கிழமை மாலை பக்தியின் நறுமணம் பரவி உள்ளது மற்றும் பக்தியின் நறுமணம் பரவ வேண்டும் என்ற தலைப்பின் கீழ் புவனகிரி அன்பழகன் முன்னிலையில், நடுவராக சுகி.சிவம் ஆகியோரின் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மாலை சின்னத்திரை புகழ் நட்சத்திரங்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கும்பகோணம் பிரீமியர் குழுமத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மேலும், தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மட்டுமே கருங்கல்லினால் ஆன ஆலயங்கள் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகளை கடந்தும் இன்றும் அனைவரையும் கவர்ந்து வருவதை போல இந்த ஆலயமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.