உள்ளூர் செய்திகள்

காலநிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள்.

சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடவேண்டும்

Published On 2023-10-20 09:23 GMT   |   Update On 2023-10-20 09:23 GMT
  • கால நிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
  • கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

சேலம்:

கால நிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இம்முயற்சிப் பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றதைக் குறைப்ப தற்கான திட்டங்களை வகுத்தல், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்காகும்.

12 லட்சம் மரகன்றுகள்

வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 12 லட்சம் மரக்கன்றுகள் ஆண்டுதோறும் நடவேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தின் நிலப்பரப்பை 33 சதவிகிதம், அதாவது 3-ல் ஒரு பங்காக உயர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக அளவில் பசுமை சார்ந்த ஆற்றல் இயக்கங்களை உருவாக்கிடவும், சூரிய சக்தி ஆற்றல், மரபுசாரா ஆற்றல் போன்றவற்றை உருவாக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின் உற்பத்தி

சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க சேலம் மாவட்டத்தில் 1,000 ஏக்கர் நிலம் கண்டறிந்து மின்சார வாரியத்திற்கு வழங்கிடும் வகையில் இதுவரை 238 ஏக்கர் நிலம் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நிலங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் கடைகள் தோறும் சூரிய சக்தி ஆற்றல் கொண்டு வரவும், சேலம் மாவட்டத்தினை பசுமை ஆற்றல் தயாரிக்கும் மாவட்டங்களில் முதன்மை யான மாவட்டமாக உருவாக்கிட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, தமிழ்நாடு காலநிலை மாற்றப் பணி உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா, உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் (பயிற்சி) மாதவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News