காலை உணவு திட்ட சமையல் அறையில் பேரூராட்சி உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
- சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.