திருமாவளவன் மீதான வழக்கு விசாரணை: சேலம் கோர்ட்டில் திடீர் போலீஸ் குவிப்பு
- விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது.
- சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
சேலம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை பூட்டி அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கார்த்திக், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் சேலம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வன்னியர் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் கோர்ட்டில் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் காலை முதலே சேலம் கோர்ட்டில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கோர்ட்டுக்குள் செல்லும் வாகனங்களும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டன. இதனால் கோர்ட் வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.