உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டிஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-09-30 07:36 GMT   |   Update On 2023-09-30 07:36 GMT
  • தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
  • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

ஏற்காடு:

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர் விடுமுறை

இதேபோல் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் முகாமிட்டு உள்ளனர். ஏற்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது.

விடுதிகளில் இடம் இல்லை

இதனிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் அறைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் நேற்று இரவு முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதி அடைந்தனர். ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அதில் உறங்கினர்.

கடும் குளிர்

தற்போது ஏற்காட்டில் லேசான சாரல் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அறை கிடைக்காமல் இரவு முழுவதும் காரில் தூங்கியவர்கள் குளிர் தாங்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில சுற்றுலா பயணிகள் திரும்பி ஊருக்கு சென்று விட்டனர்.

3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News