சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்அம்மன் சிலை மீது வந்து அமர்ந்த பச்சைகிளி
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
- புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் 27-ந் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக வைபவமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
இந்த நிகழ்வு காட்டு தீயை போல பரவியது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்ந்திருப்பதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து கோவில் குருக்கள் கூறும்போது எங்கிருந்து பச்சை கிளி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மன் கருவறையில் சிலையின் மீது அமர்ந்து கொள்வதும், அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும்போது அருகிலேயே அமர்ந்து கொண்டும் கோவில் நடை சாத்தும் போது கூட கருவறையிலேயே பச்சைக்கிளி அமர்ந்து இருக்கிறது.
கடந்த 3 நாட்களாக கிளியானது கருவறையை விட்டு செல்லாமல் உள்ளது. அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தையே உண்டு வருகிறது.
அடுத்த மாதம் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கிளி ரூபத்தில் இங்கு வந்து இருப்பதாக குருக்கள் பரவசத்துடன் தெரிவித்தார். மேலும் பச்சை நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். பச்சைக்கிளி அல்லது வெட்டுக்கிளி இல்லங்கள் வந்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அம்மனே வந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.