உள்ளூர் செய்திகள்

`சாம்சங்' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: அமைச்சர்கள் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை

Published On 2024-10-07 06:39 GMT   |   Update On 2024-10-07 06:39 GMT
  • 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
  • தொழிலாளர்கள் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

சென்னை:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.


இந்த நிலையில் 'சாம்சங் இந்தியா' தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று தலைமைச் செயலகத்தில், ஆலையின் நிர்வாகத்தினரை அழைத்து பேசினார். அப்போது நிர்வாகத்தினர் என்னென்ன கோரிக்கையை ஏற்பார்கள்? என்பதை கேட்டறிந்தார்.

இதன் அடுத்த கட்டமாக இன்று காலையில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நல அதிகாரிகளும் ஆலை நிர்வாகத்தினரும் இருங்காட்டு கோட்டையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா? என்பது மாலையில் தெரிய வரும்.

Tags:    

Similar News