உள்ளூர் செய்திகள்

ராஜா எம்.எல்.ஏ., 

சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டுக்குள் நடத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்

Published On 2023-03-28 09:09 GMT   |   Update On 2023-03-28 09:09 GMT
  • 100 ஆண்டு பழமையான ஈஸ்வரன் கோவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருந்தார்.
  • சங்கரன்கோவில் தங்கத்தேரில் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் தங்கதேர் உலா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் 100 ஆண்டு பழமையான ஈஸ்வரன் சமேத சிவகாமி அம்பாள் கோவில் திருப்பணிகளை முடிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்திருந்தார்.

கும்பாபிஷேக பணிகள்

அந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று சட்டசபையில் பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேல சிவகாமியாபுரத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான கோவிலான ஈஸ்வரன் கோவிலில் வருகிற 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு 8 மாத்திற்குள் கும்பாபிஷேக பணிகள் நடத்தப்படும் என்றார்.

மேலும் இதற்கான 10 பணிகளில் 6 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 4 பணிகள் விரைவில் முடிக்கப்படும். இதற்காக சுமார் ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சங்கரநாராயண சுவாமி கோவில்

அதனை தொடர்ந்து பேசிய ராஜா எம்.எல்.ஏ. 1000 ஆண்டு பழமை வாய்ந்த சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் தற்போது நகராட்சி வசமாக இருக்கும் ஆவுடை பொய்கை தெப்பத்தின் சுற்றுச்சுவர் மோசமான நிலையில் உள்ளதால் அதை பராமரிக்க வேண்டும், அந்த தெப்பக்குளத்தை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டுக்குள் ரூ. 6 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். சங்கரன்கோவில் தங்கத்தேரில் தங்க முலாம் பூசும் பணிகள் இன்னும் சில நாட்களுக்குள் பூசப்பட்டு மீண்டும் தங்கதேர் உலா நடைபெறும்.

ஆவுடைபொய்கை தெப்பம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து சுமார் ரூ. 90 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு தை மாதம் கடைசி வெள்ளி அன்று தெப்ப தேரோட்டம் நடக்கும். அதில் ராஜா எம்.எல்.ஏ. பக்தர்களோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஈஸ்வர சமேத சிவகாமி அம்பாள் கோவில் மற்றும் சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஓராண்டுக்குள் நடத்தப்படும், ஆவுடை பொய்கை தெப்பமும் சரி செய்யப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Tags:    

Similar News