பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி- கலெக்டர் பங்கேற்பு
- வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருட்சவனம் என்பது சிறப்புக்குரியது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மரக்கன்று வழங்கினார்.
தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி கண்ணன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்து வருகிறது. ஆனாலும் தஞ்சை மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதேபோல் மரங்கள் அடர்ந்த பகுதியும் மிகவும் குறைவு.
பார்க்கும் திசை அனைத்திலும் வயல்வெளிகளும் பசுமையும் இருந்தாலும் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இதனை கருத்தில் கொண்டு மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க லட்ச கணக்கில் மரக்கன்றுகளை எளிதில் நட்டு விட முடியும்.ஆனால் எத்தனை கன்றுகள் வளர்ந்து மரமாகும் என்பது கேள்விக்குறி.
இதன் காரணமாக வருகிற ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்ப்பது என்ற குறிக்கோளுடன் இந்த வீடு தோறும் விருட்சம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இசை வனம் தமிழகத்திலேயே மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருட்ச வனம் என்பது சிறப்புக்குரியது.
திருவையாறு பகுதியில் உள்ள இசை கல்லூரி வளாகத்தில் இசைக்கருவிகள் செய்ய பயன்படும் மர வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளது இதற்கு இசை வனம் எனப்பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது வீடுதோறும் விருட்சம் என்கிற திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் நட்டவரின் பெயரிலேயே வளர்த்து உருவாக்கப்பட வேண்டும்.
இதில் கும்பகோணம் தாசில்தார் தங்க.பிரபாகரன் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகர் நல அலுவலர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஜான் ஸ்டீபன் நன்றி கூறினார்.