பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்
- வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
- மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.