உள்ளூர் செய்திகள்

அமராவதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2024-08-16 05:04 GMT   |   Update On 2024-08-16 05:04 GMT
  • மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News