உள்ளூர் செய்திகள்

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது

Published On 2023-08-06 11:35 GMT   |   Update On 2023-08-06 11:35 GMT
  • விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
  • தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும்.

சென்னை:

தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல் படுத்தப்பட உள்ளது.

இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் வினியோ கிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பங்களை குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுத்தனர். முதற்கட்ட முகாமில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். 2-வது கட்ட பதிவும் நேற்று தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் முதற் கட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் எவை எவை என்பதை கண்டறிய ஒவ்வொரு விண்ணப்பமாக ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.

இதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் குறித்த வழிகாட்டு நெறி முறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

அதை அடிப்படையாக வைத்து விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவரா? ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ளவரா? 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் உள்ளதா? ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்களா? என்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

இதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும். அதை வைத்து பயனாளிகள் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News