உள்ளூர் செய்திகள்

தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் பகுதியில் தடுப்புச் சுவர் வரை கடல் நீர் புகுந்த காட்சி.

தனுஷ்கோடி கடலில் சீற்றம்: கடல்நீர் கரையை தாண்டி வந்ததால் பரபரப்பு

Published On 2024-04-01 03:38 GMT   |   Update On 2024-04-01 03:38 GMT
  • தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது.
  • அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடல் பகுதி. இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து கடல் சீற்றமாகவே இருந்தது.

மாலை 4 மணிக்கு பிறகும் கடல் சீற்றத்துடனும், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.

அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் பயங்கர கடல் சீற்றம் இருந்ததுடன் கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது.

இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். செல்போனிலும் வீடியோ படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதுபோல் தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதி வரை, கடல் நீர் புகுந்தது. இதன் காரணமாக, கடலுக்குள் இருந்த ஏராளமான நண்டுகள் கரைப்பகுதிக்கு வந்து முகாமிட்டன. இங்கு கடல் சீற்றமாக இருப்பதால், தடுப்புச்சுவரும், சாலையும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த மீனவர் உமைய செல்வம் கூறுகையில், தற்போது கடல் சீற்றத்தால் கடல் நீர் கரையை தாண்டி வந்துள்ளது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை கடல் நீரில் இழுத்துச் சென்றது. அவற்றை கடும் முயற்சி எடுத்து மீட்டு தடுப்புச் சுவர் பகுதிக்கு கொண்டு வந்து வைத்து உள்ளோம் என்றார்.

அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. வழக்கமாக கடல் சீற்றம் இருக்கும்போது பலத்த சூறாவளி காற்று வீசும். ஆனால் நேற்று ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் காற்று வீசாத நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் குமரி மாவட்டம் நேற்று கொல்லங்கோடு இரையுமன்துறை பகுதியில் கடல்சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அலை தடுப்புச்சுவரை கடந்து கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

இதனால் அச்சம் அடைந்த மீனவ மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கடலில் சீற்றம் சற்று தணிந்தது. இதையடுத்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால், மீனவர்கள் இரவிலும் சாலைகளில் கூடி நின்றனர்.

கன்னியாகுமரியிலும் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். 

Tags:    

Similar News