- தமிழகம் முழுவதிலும் இருந்து 900-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- ஆண்கள் பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ப டாத சூழல் இருந்தது.
இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் தேர்வு நேற்று சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலை என்.ராஜா பங்கேற்று துவக்கி வைத்தார்.
மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 900 பேர் போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் நடைபெறும் இந்த தேர்வில் ஆண்கள் பிரிவில் 9 பேரும் , பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் தகுந்த சான்றுகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய மாநில தலைவர் ராஜா கபடிக்கு என்று இங்கு பிரத்தியேகமாக நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்ஸலென்ஸ் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி அமைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.
பேட்டியின் போது நகர மன்ற கவுன்சிலர் ரஜினி உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.