கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவில் 16 வகை பூங்கா, 3 வகை வனங்கள்
- ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.
கோவை,
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில் மத்திய ஜெயில் அமைந்துள்ளது.
இந்த ஜெயிலை இடம் மாற்றி விட்டு அந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
இதை தொடர்ந்து முதல் கட்டமாக ஜெயில் வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் செம்மொழி பூங்காவுக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் செம்மொழி பூங்கா திட்ட பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.
மாநகராட்சி வசம் உள்ள ஜெயில் இடத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.172.21 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்க தமிழக சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 ஏக்கரிலும், 2-ம் கட்டமாக 120 ஏக்கரிலும் பூங்கா அமைக்கப்படும்.
இயற்கையை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையிலும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்த பொழுது போக்குக்கு அளிக்கும் வகையிலும் உலக தரத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பூங்காவில் வரலாற்று சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகியவை அமைகின்றன.
பூங்காக்களின் வகை, அதன் தன்மைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமண பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகையான பூங்காக்கள் கலை நுட்பத்டன் அமைக்கப்பட உள்ளன.
இந்த பூங்கா வளாகத்தில் விழா நடத்துவதற்கான மண்டபங்கள், உள் அரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சி செய்யும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.