கோவில்பட்டியில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் - மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோரிக்கை
- பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
- கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
கோவில்பட்டி:
கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. புதுடெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை ரெயில்வே பாதைக்கு இணையாக புதிய சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை ரெயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் ரெயில்வே ஸ்டேஷனாக கோவில்பட்டி திகழ்ந்து வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 2-ம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும்.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், பேட்டரி கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், ஓகா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடம்பூர் ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., வுக்கு நன்றி
கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை புதிய சர்வீஸ் ரோடு மற்றும் சுரங்க நடைபாதை அமைக்க வலியுறுத்தி, மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தமைக்காக, சுப்புராயலு தலைமையில், சீனிவாசன் நகர், இந்திரா நகர் பகுதி பொதுமக்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., வை சந்தித்து சால்வை அணித்து நன்றி தரெிவித்தனர்.