ஓமலூர் அரசு மருத்துவமனையில் முக கவசம் பற்றாக்குறை
- தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
- சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் முக கவசம் பற்றாகுறையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஓமலூர், காடையாம்பட்டி தாலுகா வில் உள்ள ஓமலூர் காடையாம்பட்டி கருப்பூர் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் தாரமங்கலம் நகராட்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்களும் மற்றும் அதனை சுற்றியுள்ள 67 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு பிரசவம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு முக கவசம் இருப்பு இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓமலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தனியார் மருந்து கடைகளில் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடித்து வருகிறது.
இதனால் ஒரு சில பணியாளர்கள் முககவசம் அணியாமலேயே பணி யாற்றி வருகின்றனர். எனவே உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்கள் செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு அவ்வப்போது முகக்க வசங்களை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.