உள்ளூர் செய்திகள்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி வெள்ளி அங்கி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Published On 2024-06-18 10:45 GMT   |   Update On 2024-06-18 10:45 GMT
  • பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது.
  • நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது. இக்கோவிலில் மரகதகலால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி மணவாளன் காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்பு ஆகும். இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


இந்நிலையில் நேற்று ஆனி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் என்பதால் விடியற்காலை முதலே இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கோவிலின் பின்பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடியற்காலை மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் ஆனந்தன் குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்தனர்.

இதன்பின்னர் மூலவருக்கு வெள்ளி அங்கி கவச அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலின் கோபுர வாசல் அருகே 108 ஆம்புலன்ஸ் சேவையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


புதுரோடு கூட்டுச் சாலை, அகரம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு வந்து செல்ல மினி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மினி பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் அருகே உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News