கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
- கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
- 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன.
வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
இளையான்குடி வட்டம் கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,465 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
மேற்கண்டவை உள்பட மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.