- மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தனித்துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய்த்துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை, கால்நடைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த குறித்த தகவல்களை பயனாளிகளுக்கு தெரிவித்தனர். முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் கண்ணதாசன், வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.