உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை பஸ் நிலையத்தில் நிற்கும் அரசு டவுன் பஸ்கள்.

டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ- மாணவிகள் அவதி

Published On 2022-09-10 07:50 GMT   |   Update On 2022-09-10 07:50 GMT
  • டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ- மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
  • ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேவகோட்டை சுற்றியுள்ள கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்தமங்கலம், திருப்பாக்கோட்டை, அதங்குடி, கண்ணங்குடி, சிறுவாச்சி, ஆறாவயல், உஞ்சனை, புதுவயல் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

தேவகோட்டையில் 10- க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் வந்து செல்ல இந்த பஸ்களை நம்பியே உள்ளனர்.

பெரும்பாலான டவுன் பஸ்களில் டயர்கள் மோசமான நிலையிலும், தரம் குறைந்தும் உள்ளன.இந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அரசு டவுன் பஸ்களின் அவல நிலை குறித்த வீடியோவை அரசு பஸ் டிரைவர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தற்போது தினமும் 5-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தங்கள் கிராமத்திற்கு பஸ் வரவில்லை என்றால் அன்று மாணவ, மாணவிகள் விடுமுறை தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு செல்ல மாலை நேரத்தில் பஸ் இல்லாததால் சில நாட்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

இது பற்றி அரசு போக்குவரத்து கழக பணியாளர் கூறுகையில், ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் இலவச பயணத்தால் டவுன் பஸ்களில் வசூல் குறைவாக இருக்கிறது.

இதனால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. உடனடியாக ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.அரசு டவுன் பஸ்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News