கிராவல் மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு
- கிராவல் மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
- இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிராமணம்பட்டி ஊராட்சியில் உள்ள குண்டேந்தல்பட்டி கிராமத்தில் இருந்து வரும் பிராமணங்கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவும் 1500 ஆயகட்டுதாரர்களும் கொண்ட மிகப்பெரிய கண்மாயாகும்.
பல வருடங்களாக கண்மாய்க்கு குடிமராமத்து பணி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலிங்கு பாதை, வரத்து கால்வாய், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் பொதுப்பணி துறையினரால் மேற்கொ ள்ளப்பட்டு வந்தது.
தற்சமயம் காரைக்குடி யிலிருந்து மதுரை வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வரும் காரணத்தினால் அப்பணிக்காக இக்கண்மா யின் வரத்து கால்வாய் அருகே 2 டிப்பர் லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் எந்திரத்துடன் கிராவல் மண் எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்தப்பகுதி கிராம மக்கள் கிராவல் மண் அள்ளுவதை கண்டித்து அங்கு முற்றுகையிட்டனர். தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோஷ்டி யூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கலையரசன், கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.