கள்ளச்சாராயம் 3 வருடங்களுக்கும் மேலாக விற்கப்படுகிறது:பொதுமக்கள் குமுறல்
- ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்.
- எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆரம்பத்தில் சாவுக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல. வாந்தி, வயிற்று போக்குதான் என்று இடமாற்றம் செய்யப்பட்ட கலெக்டர் கூறியதை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தனர். உடனடியாக தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பை குறைத்திருக்க முடியும் என்றார்கள்.
தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கூறும்போது, `வாந்தி, வயிற்று போக்குக்கு காரணமே கள்ளச்சாராயம் தான். சாராய விற்பனை பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை மேட்டில் தாராளமாக நடக்கிறது. இது போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ளது. கண்டும் காணாமல் இருந்தது தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணமாகி விட்டதாக ஆவேசப்பட்டார்'.
கருணாபுரத்தை சேர்ந்த பெண்கள் கூறும்போது, `எங்கள் தெரு அருகில் உள்ள தெருக்களிலேயே சாராயம் விற்கிறார்கள். எல்லோருமே கூலி வேலைக்கு போகிறவர்கள் தான். கையில் காசு கிடைத்ததும் பாக்கெட்டில் சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள்.
ஊருக்கு வெளியே எங்காவது விற்றால் வயதானவர்கள் அவ்வளவு தூரம் நடந்து சென்று குடிக்க யோசிப்பார்கள். ஊருக்குள்ளேயே விற்பதால்தான் எல்லோரும் குடிக்கிறார்கள்' என்றார்.
காலை 5 மணிக்கே ஒரு பாக்கெட் சாராயத்தை தனது கணவர் குடித்துவிட்டு கண் எரியுது, வயிறு வலிக்குது என்று துடித்ததாகவும் உடனே ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்ததாகவும் கூறினார்.