தென்காசி மாவட்டத்தில் தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம்
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
- ஸ்டாலின்நகர் பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி கட்டி, அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையம்:
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேன் பொத்தை ஊராட்சியில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் சங்கர நாராயணன், பயிற்சி சப்- கலெக்டர் கவிதா, தாசில்தார் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தை மணி, மாணிக்கவாசகம், பஞ்சாயத்து தலைவர் ஜாபர் அலி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
கடையம் பெரும்பத்து பஞ்சாயத்தின் கீழ் வெய்க்காலிபட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்படசிறிய கிராமங்கள் உள்ளது. இதில் மேட்டூரின் ஒரு பகுதியை சபரிநகர் என்றும், வெய்க்காலிப் பட்டி என்றும் பெயர் மாற்றம் செய்ய ஊராட்சி தலைவர் பொன்ஷீலா ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மேட்டூர் பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மேட்டூர் பரி. திரித்துவ ஆலயம் முன்பு திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
ஸ்டாலின்நகர் பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி கட்டி, அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி திருமலை முருகன் ஆகியோர் 2 நாட்களில் பிரச்சிணைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம் கல்லூரணி கிராம சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து கையெழுத்திட்ட மனு ஒன்றை ஊராட்சி தலைவரிடம் வழங்கினர். அதில் காமராஜர் நகர் பகுதியில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் இருக்கும் இடத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்து தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தனர்