4 நகரங்களில் `குரங்கம்மை' சிகிச்சைக்கு சிறப்பு வார்டு-மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
- தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சிறப்பு வார்டுகள்.
சென்னை:
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் குரங்கம்மை நோய்க்கான சிறப்பு சிகிச்சை வார்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் இங்கும் பரவி விடாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை யாருக்கும் இந்த தொற்று இல்லை. தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணித்து வருகிறார்கள்.
குரங்கம்மை அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
10 படுக்கைகளுடன் தொற்று நோயை தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்புகள் கடந்த 3 ஆண்டுகளை விட குறைந்து உள்ளது.
இந்த ஆண்டு தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.