உள்ளூர் செய்திகள்

பட்டாசு விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

Published On 2022-10-23 09:13 GMT   |   Update On 2022-10-23 09:13 GMT
  • கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்படுகிறது.
  • 10 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை,

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து பொது மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

பட்டாசுகளை வெடிப்பதில் வாலிபர்கள் பலர் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். இது போன்ற சாகசங்கள் சில நேரங்களில் விபத்துக்கு வழிவகுக்கிறது. ஒருசில நேரங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கும் போது விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பாட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக அரசு ஆஸ்பத்திரியில் 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் 10 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எனவே, பட்டாசு வெடிப்பின் போது ஏற்படும் தீ விபத்தில் பாதிக்கப்படுபவர்களை சிறிதும் தாமதிக்காமல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொது மக்கள், வாலிபர்கள் அனைவரும் விபத்தில்லாத வகையில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News