தரையில் தரதரவென இழுத்து துன்புறுத்தப்பட்டேன்: செந்தில் பாலாஜி கூறியதாக மனித உரிமை ஆணைய உறுப்பினர் தகவல்
- செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் எனக் குற்றச்சாட்டு
- மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார்
தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என செந்தில்பாலாஜி தெரிவித்த போதிலும், அதிகாரிகள் அவரை துன்புறுத்தியுள்ளனர். மிகுந்த மனஉளைச்சல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் நடந்த விதத்தில் மனித உரிமை மீறப்பட்டது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் மருத்துவமனை வந்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப்பின் அவர் கூறியதாவது:-
செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள வந்தேன். அவர் சோர்வாக காணப்பட்டார். அதனால் காத்திருந்து அவரிடம் விசாரணை நடத்தினேன். அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய பின்னரும் தரையில் தரதரவென இழுத்து துன்புறுத்தினர்.
நெஞ்சுவலி என்று கூறியபோதிலும் அதிகாரிகள் வாகனத்தில் இருந்து தள்ளி துன்புறுத்தினர். கைது செய்யப்பட்டபோது கடுமையான வகையில் நடத்தப்பட்டேன். மூன்று அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால் தற்போது பேசமுடியவில்லை என்று கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனித உரிமை மீறப்பட்டதாக புகார்கள் வந்தனர். புகார் அடிப்படையிலும் தாமாக முன்வந்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம். தற்போதும் புகார் வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.