காட்டுப்பள்ளியில் சாலையில் ராட்சத பள்ளங்களால் 50 லாரிகள் பழுதானது
- சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
- லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது.
பொன்னேரி:
மீஞ்சூரைஅடுத்த காட்டுப்பள்ளியில் நிலக்கரி கிடங்கு சாலை வடசென்னை அனல் மின்நிலைய குடியிருப்பு முதல் நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனை காமராஜர் துறைமுகம் பராமரித்து வருகிறது.
இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் சேமிப்பு கிடங்கில் இருந்து நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் 4 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் பழுதடைந்து பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது. சேதம் அடைந்த சாலையில் லாரிகள் செல்லும் போது அதன் டயர்கள் அடிக்கடி கிழிந்து விடுவதால் லாரி டிரைவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, நிலக்கரி கிடங்கு சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு லாரியாக சென்று வருவதால் குறித்த நேரத்தில் நிலக்கரியை ஏற்றி செல்ல முடிவதில்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களில் சேதம் அடைந்த சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட லாரிகள் பழுதாகி உள்ளன. எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாகம் சாலையை சீரமைத்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.