குத்தாலத்தில், மாநில அளவிலான கபடி போட்டி
- திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-ம் இடம் பிடித்தது.
- இறுதி போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச்சென்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி அக்.27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் க.அறிவுச்செல்வன் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.
முதல்நாள் போட்டியை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.நாக்-அவுட் முறையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணியும் வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் மோதின. இதேபோல், சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இப்போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் முடிவில், தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.
சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ 70ஆயிரம் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000 ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து ரூ. 40,000 ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கி பாராட்டி பேசினார்.
இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி மற்றும் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.