பேராவூரணியில் விரைவு ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியில் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.
- 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் மெய்ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பழனிவேல், அமைப்பாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி நடராஜன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் 24ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள செகந்தராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்படுவதை பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த ரெயிலை தஞ்சாவூர் மார்க்கமாக திருப்பி விட வேண்டும் என தஞ்சை ரெயில் பயணிகள் சங்கம் முயற்சிப்பதை கண்டிக்கிறோம். செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்பட இருக்கிற இந்த ரெயிலை பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த வழித்தடத்தில் அகல ரெயில் பாதை மாற்றுவதற்கு முன் இயக்கப்பட்ட காரைக்குடி- சென்னை கம்பன் விரைவு ரெயிலை பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி மீண்டும் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியில் தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட ரெயில் கட்டண சலுகைகளை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், கதிர்காமம், சேகர், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.