மெட்ரோ ரெயில் நிலையங்களில் 'பைக் டாக்சி' சேவை நிறுத்தம்
- தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
- ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் பெண் பயணிகளின் நலனுக்காக பைக் டாக்சி வசதி செய்து கொடுக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, பெண்கள் மட்டுமே இயக்கும் வகையில், இணைப்பு இருசக்கர வாகன (பைக் டாக்சி) வசதியை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முதல கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைக் டாக்சி சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன.
இதற்கு, வாடகை ஆட்டோ தொழிலாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பையடுத்து, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் பெண் பயணிகளின் நலனுக்காக பைக் டாக்சி வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்காக, குறிப்பிட்ட அந்த தனியாா் நிறுவனத்துடன், நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்ததைத் தொடா்ந்து, மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எந்த ரெயில் நிலையத்திலும் இந்த சேவை இல்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.