கடலூர் மாவட்டத்தில் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை
- மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
- பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடலூர்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல் சூழ்நிலைகளை எதிர்கொள்வது தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சியினை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
அதன்படி, கடலூர் செம்மங்குப்பத்தில் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் விடுக்கப்படும் புயல் பேரிடர் ஒத்திகை அறிவிப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றமானது, அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது குறித்தும், மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கி கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சிறுபாளையூர் (வடக்கு), புவனகிரி சிலம்பிமங்கலம், சிதம்பரம் பெராம்பட்டு, காட்டுமன்னார்கோவில் சர்வராஜன்பேட்டை ஆகிய இடங்களிலும் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.