கும்பகோணம் அருகே விளைந்த `வினோத தேங்காய்' ஆச்சரியத்துடன் கண்டு ரசித்த மக்கள்
- வினோத தேங்காய்யை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
- தேங்காயை பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போகிறோம் என்றார்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள நரிக்குடி கிராமத்தில் மெயின்ரோட்டில் வசிப்பவர் காசிநாதன் (வயது 60). விவசாயி. இவரது தென்னந்தோப்பில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தோப்பில் உள்ள தென்னை மரங்களில் விளைந்த தேங்காய்களை (மட்டையுடன்) பறித்து, அதனை வீட்டில் வைத்திருந்தார். பின்னர், நேற்று அவர் பறித்த தேங்காய்களில் இருந்து மட்டை தேங்காய்களை உறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரே மட்டையில் ஒரு பெரிய தேங்காயுடன் இயற்கையாகவே விளைந்த குட்டி தேங்காயும் நாருடன் சிக்கி இருந்துள்ளது. அந்த குட்டி தேங்காயின் அளவு சுமார் 3 செ.மீ வரை இருந்துள்ளது.
இதனை கண்ட அவர் ஆச்சரியம் அடைந்தார். பின்னர், இதுகுறித்து அவர் குடும்பத்தினருக்கு தெரிவித்த, அவர்களும் இந்த வினோத தேங்காய்யை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
பின்னர், இதுகுறித்து விவசாயி காசிநாதன் கூறுகையில்:-இது போன்ற வினோதமான தேங்காய் இதுவரை விளைந்ததில்லை. எனக்கு தெரிந்து இதுவே முதன்முறை. எனவே, இந்த தேங்காயை நாங்களே (குடும்பத்தினர்கள்) பாதுகாத்து வைத்துக்கொள்ளப் போகிறோம் என்றார்.
மேலும், இந்த ருசிகர சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தினர், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அந்த குட்டி தேங்காயை கண்டு புன்னகைத்து மகிழ்ந்தனர்.