சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் பயணிகளுக்கு தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
- தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.
தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.