வண்டலூரில் டாஸ்மாக் மீது வெடிகுண்டு வீசிய மாணவர்கள் உள்பட 2 பேர் கைது
- மதுபான பார் ஊழியர் முத்துராஜ் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது22). இவர் தாம்பரம் சேலையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வண்டலூர் இரணியம்மன் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு மதுபாட்டில் வாங்கிய அவர்கள் அதையொட்டி உள்ள மதுபான பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பாரில் நாய்குட்டிகள் சுற்றித்திரிந்தன. அந்த நாய்குட்டிகளை அவர்கள் இருவரும் கொஞ்சினார்கள். பின்னர் அந்த நாய் குட்டிகளை தங்களுடன் எடுத்துச்செல்ல முயன்றனர். அதற்கு பார் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாய் குட்டிகளை எடுத்து செல்லக்கூடாது. அதை விட்டுவிடுங்கள் என்றனர். இதனால் போதையில் இருந்த சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகியோருக்கும், பார் ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாரில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரும் மதுபோதையில் டாஸ்மாக் கடைக்கு சென்றனர். டாஸ்மாக் கடை முன்பு நின்றபடி மதுபான பார் ஊழியர்களை வெளியே வருமாறு கூறி தகராறு செய்தனர். ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் டாஸ்மாக் கடை மீது நாட்டு வெடிகுண்டை வீசினார்கள். இதில் டாஸ்மாக் கடையின் கேட் மீது குண்டு விழுந்து வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மதுபான பார் ஊழியர் முத்துராஜ் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தார்.
அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.