ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவன் காயம்- பொதுமக்கள் சாலை மறியல்
- சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் வசந்த் (வயது 17).
இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் வயலூர் பகுதியில் சென்றபோது பஸ்சில் இருந்த மாணவன் வசந்த் திடீரென தவறி கீழே விழுந்தான்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை- கும்பகோணம் சாலையில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.
உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
மேலும் பஸ் நிற்காமல் சென்றதை கண்டித்தும் கூறினர்.
புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.