உள்ளூர் செய்திகள்

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Published On 2024-05-31 05:51 GMT   |   Update On 2024-05-31 05:51 GMT
  • ஏழை குழந்தைகளை கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி.
  • மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.

இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளி களின் கட்டணக் கொள்ளை யைத் தடுக்க முடியவில்லை. இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்? அதை விடுத்து அரசிடமும் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஏழைக் குழந்தைகளையும் கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதை அரசும் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.

கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்த கட்ட ணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News