கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: 22 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு
- 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
- 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
வருகிற 22-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிப்பட்டது. இந்த அண்டு பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப் பிரிவு களில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.
வேலைவாய்ப்புகளுக் கான சூழல் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் தொடர்பான 22,248 இடங்களை கல்லூரிகள் அதிகரித்துள்ளன.
பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 1 ஆயிரமாக இருந்த இடங்கள் இந்த வருடம் 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் போன்ற முக்கிய பிரிவுகளில் இந்த வருடம் 3000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:-
நல்ல உள் கட்டமைப்பு உள்ள கல்லூரிகளில் மட்டுமே தங்கள் சேர்ககையை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக மாணவர்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங் ஆகியவற்றில் கூடுதல் இடங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளன.
இந்த படிப்புகளில் 1,147 இடங்கள் அதிகரித்துள்ளது. 'சிப்' தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அனுமதியை பெறுவதற்கு விண்ணப்பித்த 476 கல்லூரிகளில் 223 கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 50 கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
உள் கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடியு செய்துள்ளோம். இந்த கல்லூரிகள் உள் கட்டமைப்பு வசதியை பூர்த்தி செய்ததா? என்பது மீண்டும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.