உள்ளூர் செய்திகள்

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உற்சாகமாக சென்ற மாணவ-மாணவிகள்: பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு

Published On 2023-07-03 06:56 GMT   |   Update On 2023-07-03 06:56 GMT
  • அரசு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் டாப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி.காம் பாடப்பிரிவு கிடைத்தது.
  • இன்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவர்களுக்கு திட்ட மிட்டபடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கின. தமிழ கத்தில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளும் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் உயர் கல்வியை தொடரும் வகையில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டினர். வழக்கம் போல இந்த ஆண்டும் பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டது. அரசு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் டாப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி.காம் பாடப்பிரிவு கிடைத்தது.

2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு தான் ஜூலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவு வந்தவுடன் மாணவர் சேர்க்கையை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியது.

இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் முறையாக பெறப்பட்டன. 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு 84,899 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 22 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு நாளை (4-ந்தேதி) நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பி.சி. இனத்தவர்களுக்கு நாளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5-ந்தேதியும், எஸ்.சி-க்கு 6-ந்தேதியும், 7-ந்தேதி தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் 'வராண்டா' கலந்தாய்வு கல்லூரிகளில் நடைபெறுகிறது.

இதற்கிடையில் இன்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவர்களுக்கு திட்ட மிட்டபடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்றனர்.

பள்ளி படிப்பை முடித்து விட்டு முதன்முதலாக கல்லூரி வளாகத்திற்குள் கால்பதிக்கின்ற அளவில் அவர்கள் தங்கள் உயர் கல்வி பயணத்தை இன்று தொடங்கினர்.

புதிதாக வந்த மாணவ-மாணவிகளை கல்லூரியின் மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றதோடு அவர்களை வகுப்பறையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்கள்.

மாணவர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டனர். ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில் தொடக்க வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன. சில கல்லூரிகளில் உயர் கல்வி வழிகாட்டு கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்து உள்ளன.

அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாமல் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்லூரி காலத்தை முறையாக பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெறக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் மாணவர்களுக்கு ஆலோசனை அறிவுரைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர் கல்வி தூண்டுதல் நிகழ்ச்சி, வேலைவாய்ப்பு பற்றி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநில கல்லூரி, நந்தனம், வியாசர்பாடி அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிமுறைகள் குறித்த வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

சென்னையில் ராணி மேரி, ஸ்டெல்லாமேரி, பாரதி, எத்திராஜ், கிறிஸ்துவ கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட மகளிர் கல்லூரிகள் பரபரப்பாக காணப்பட்டன. காலை மற்றும் மாலை வகுப்புகளில் சேர்ந்த மாணவ-மாணவிகள் முதல்நாள் வகுப்பிற்கு பெற்றோருடன் வந்தனர்.

சிலர் கல்லூரி வாகனத்திலும், இருசக்கர வாகனத்திலும் கல்லூரிகளுக்கு சென்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியதால் அரசு பஸ் மற்றும் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Tags:    

Similar News